பயனாளர் மதிப்பீடு: 4 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

கேள்வி & பதில்

  1. 'தகவலறியும் உரிமை' என்றால் என்ன?

தகவலறியும் உரிமை என்றால் பகிரங்க அதிகாரசபைகளிடம் தமக்கு வேண்டிய தகவல்களை அறிந்துகொள்ள பொதுமக்களுக்குள்ள உரிமை (பகிரங்க அதிகாரசபை என்றால் என்ன என்பதற்கு கீழே பார்க்கவும்).

  1. தகவலறியும் உரிமை தொடர்பில் உள்ள இலங்கையின் சட்டம் எது?

இலங்கையின் அரசியல் யாப்பின் 19ஆவது சீர்திருத்தத்தில் தகவலறியும் உரிமை (பிரிவு-14 அ) உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அதன்படி 2016ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை சட்டம் உருவாக்கப்பட்டது.

  1. 'தகவல்' என்றால் என்ன?

சட்டத்தின் படி 'தகவல்' என்பது:

'பதிவேடுகள், ஆவணங்கள், குறிப்புக்கள், மின் அஞ்சல்கள், அபிப்பிராயங்கள், மதியுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றுநிரூபங்கள், கட்டளைகள், சம்பவத்திரட்டுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், பத்திரிகைகள், மாதிரிகள், உருப்படிவம், கடிதத்தொடர்பு, குறிப்பறிக்கை, விரைவுச்சட்டவாக்கம், புத்தகம், திட்டவரைபு, வரைவும் வரைபடம், பட அல்லது வரைபட வேலை, புகைப்படம், திரைப்படம், குறும்படம், ஒல்லிப்பதிவு, ஒளிநாடா, இயந்திரம் மூலம் வாசிக்கக்கூடிய பதிவுகள், கணணிப்பதிவுகள் மற்றும் வேறு ஆவணபொருள், உள்ளடங்கலாக அதனது பௌதீக படிவம் அல்லது பண்பு பொருள்படுத்தாமல் ஏதேனும் படிவத்திலான ஏதேனும் பொருள் மற்றும் அதன் ஏதேனும் பிரதி என்பவற்றை உள்ளடக்குகிறது'.

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு

  1. தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு என்றால் என்ன?

தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பில் கொள்கை தயாரிப்பு, அமுல்ப்படுத்தல் மற்றும் மேன்முறையீடு தொடர்பான விடயங்களை கையாளும் 5 சுயாதீன உறுப்பினர்களை கொண்ட ஆணைக்குழுவாகும்.

  1. தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவை நியமிப்பவர் யார்?

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு அரசியலமைப்பு சபையின் சிபாரிசின் பிரகாரம் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறது. சட்டத்தரணிகள் சங்கம், பதிப்பாளர்கள்/பதிப்பாசிரியர்கள்/ஊடக நிறுவனங்கள் மற்றும் ஏனைய சிவில் சமூக நிறுவனங்களால் சிபாரிசு செய்யப்படும் பொதுவாழ்வில் புகழ்பெற்றவர்களின் பெயர்களை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்பு சபை ஜனாதிபதிக்கு தமது சிபாரிசுகளை வழங்குகிறது.

  1. தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தற்போதைய உறுப்பினர்கள் யார்?

திரு. மஹிந்த கம்மம்பில (தலைவர்), நீதியரசர் ஏ. டபிள்யு, ஏ. சலாம், செல்வி. கிஷாலி பிண்டோ-ஜயவர்தன, திரு. எஸ்.ஜி.புஞ்சிஹேவா மற்றும் கலாநிதி. செல்வி திருச்சந்திரன் ஆகியோர் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தற்போதைய உறுப்பினர்களாக உள்ளனர்.

  1. தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் யார்? அவரின் அதிகாரங்கள் என்ன?

பணிப்பாளர் நாயகம் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவார். ஆணைக்குழுவின் பணிப்பாளார் நாயகமாக மூத்த சிவில் சேவை அதிகாரியான திரு. பியதிஸ்ஸ ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் உத்தியோகத்தர், குறித்தளிக்கப்பட்ட அதிகாரி மற்றும் பகிரங்க அதிகாரசபை

  1. 'தகவல் உத்தியோகத்தர்' என்பவர் யார்?

பொதுமக்கள் பகிரங்க அதிகாரசபையில் தமது முதல் தகவல் கோரிக்கையை முன்வைக்க வேண்டிய அலுவலகர் தகவல் உத்தியோகத்தர் ஆவார். அவர் உங்களது தகவல் கோரிக்கையினை கருத்தில் கொண்டு தகவலை வழங்கும் பொறுப்பினை கொண்டுள்ளார்.

  1. தகவல் உத்தியோகத்தரின் பணிகள் எவை?

தகவலறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் தகவல் கோரிக்கையை முன்வைப்பவருக்கு தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் தகவல் உத்தியோகத்தர் வழங்க வேண்டும். இதனுள் தகவல் கோரிக்கை கிடைக்கப்பெற்றமைக்கான ஏற்பு ஒப்ப ஆவணம், குறித்த கோரிக்கைக்கு உரிய நேரத்தில் பதிலளித்தல், கோரிக்கைக்கு பதிலளிக்க கால அவகாசம் தேவைப்படுமாயின் அதனை கோரிக்கையாளருக்கு அறிவித்தல் வழங்கல், தகவல் கோரிக்கை வாய் மொழி மூலம் விடுக்கப்படுமாயின் அதனை எழுத்து மூலம் மேற்கொள்ளல், தகவல் கோரிக்கைகள் தொடர்பிலான பதிவுகளை பராமரித்தல் மற்றும் தகவல் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க அதிகாரசபையின் ஏனைய உறுப்பினர்களின் உதவியை நாடல் ஆகியன உள்ளடங்குகின்றன.

  1. 'குறித்தளிக்கப்பட்ட அதிகாரி' என்றால் யார்?

தகவல் கோரிக்கை தொடர்பில் பகிரங்க அதிகாரசபையில் மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளும் அதிகாரி குறித்தளிக்கப்பட்ட அதிகாரி ஆவார். தகவல் உத்தியோகத்தரிடமிருந்து கிடைக்கும் பதில் திருப்தி அளிக்காவிட்டாலோ அல்லது பதில் கிடைக்காவிட்டாலோ குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீட்டை மேற்கொள்ளலாம்.

  1. குறித்தளிக்கப்பட்ட அதிகாரியின் பணிகள் எவை?

மேன்முறையீட்டாளரின் முறையீடு குறிப்பிட்ட கால எல்லைக்குள்ளாகவே இருக்குமாயின் அதனை ஏற்றுக்கொள்ளல்.

  1. 'பகிரங்க அதிகாரசபைகள்' என்றால் என்ன?

பகிரங்க அதிகாரசபைகள் என்றால் அரசியலமைப்பினால் அல்லது அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள், கூட்டுத்தாபனங்கள் போன்ற அரசாங்கம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ஆகியவற்றால் கட்டுப்படுத்தக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நீதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட நீதிமன்றங்கள் மற்றும் இணக்க சபைகள்.

மேலும் ஒப்பந்தங்கள், அனுமதிபத்திரங்கள் அல்லது பங்குடமை ஊடாக அரச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அனுமதி பத்திரங்களுடன் அல்லது சட்டத்தினூடாக உருவாக்கப்பட்டு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவன நிதியீட்டத்தில் இயங்கும் பொதுமக்களுக்கு பணியாற்றும் நிறுவனங்கள்.

  1. பகிரங்க அதிகாரசபை தகவல் உத்தியோகத்தர் ஒருவரை நியமித்திருக்காவிட்டால் பொதுமக்கள் என்ன செய்யவேண்டும்?

 தகவல் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டிருக்காத சந்தர்ப்பத்தில் சட்டத்தின் 23ஆம் பிரிவின் பிரகாரம் பகிரங்க அதிகார சபையின்  பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது தலைவர்  தகவல் உத்தியோகத்தராக கருதப்படுவார்.

  1. பகிரங்க அதிகாரசபையில் குறித்தளிக்கப்பட்ட அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கும் போது பொதுமக்களுக்கு அவரிடம் மேன்முறையீட்டை மேற்கொள்ளாது தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேன்முறையீட்டை மேற்கொள்ள முடியுமா?

இல்லை- தகவலறியும் உரிமை சட்டத்தில் கடுமையான மேன்முறையீட்டு முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் படி தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு இரண்டாவது மேன்முறையீட்டு அமைப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்தளிக்கப்பட்ட அதிகாரி பகிரங்க அதிகாரசபையில் நியமிக்கப்பட்டிருந்தால் ஆணைக்குழுவிடம் மேன்முறையீட்டை மேற்கொள்ளுமுன் அவரிடம் கட்டாயம் மேன்முறையீட்டை மேற்கொண்டிருக்க வேண்டும். சட்டத்தின் படி குறித்தளிக்கப்பட்ட அதிகாரியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படக்கூடிய அதிகாரம் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

  1. குறித்தளிக்கப்பட்ட அதிகாரி நியமிக்கப்பட்டிருக்காத சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் என்ன செய்யலாம்?

இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தின் படி அரச நிறுவனங்களை பொறுத்தவரை குறித்தளிக்கப்பட்ட அதிகாரி நியமிக்கப்பட்டிருக்காவிட்டால் அந்த நிறுவன தலைவர்  குறித்தளிக்கப்பட்ட அதிகாரியாக கருதப்படுவார். அதன்படி மேன்முறையீட்டை மேற்கொண்ட பின்னர் ஆணைக்குழுவை அணுகலாம். பகிரங்க அதிகார சபைகளில் தகவல் உத்தியோகத்தரோ அல்லது குறித்தளிக்கப்பட்ட அதிகாரியோ நியமிக்கப்பட்டிராத சந்தர்ப்பத்தில் குறித்த நிறுவன தலைவரிடம் தகவல் கோரிக்கையை விடுத்து பதில் கிடைக்காத பட்சத்தில்  நேரடியாக ஆணைக்குழுவை அணுகலாம்.

  1. விசேட பிரச்சனைகள் தொடர்பில் தகவல் உத்தியோகத்தர் அல்லது குறித்தளிக்கப்பட்ட அதிகாரி ஆணைக்குழுவின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள முடியுமா?

இல்லை, சட்டத்தின் பிரிவு 5(5) இன் படி தகவலறியும் உரிமை சட்டத்தில் விலக்களிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலேயே ஆணைக்குழு ஆலோசனைகளை வழங்க முடியும். இது செயற்பாட்டு ரீதியான விடயமே தவிர தகவலை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பானது அல்ல.

தகவலறியும் உரிமை கோரிக்கையை விடுத்தல்

  1. தகவலறியும் உரிமை கோரிக்கையை யார் மேற்கொள்ள முடியும்?

இலங்கை குடிமகனாக இருத்தல் வேண்டும். குடிமகன் என்பதற்குள் கூட்டிணைக்கப்பட்டு அல்லது கூட்டிணைக்கப்படாத அமைப்புக்கள் உள்ளடங்குவதுடன் அவற்றில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் குடிமக்களாக இருக்க வேண்டும்.

  1. தகவலறியும் உரிமை கோரிக்கையை மேற்கொள்ள விண்ணப்ப படிவங்கள் உள்ளனவா?

ஆம், தகவலறியும் உரிமை விண்ணப்ப படிவம் 01 பெப்ரவரி 2017இல் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் இவ்விண்ணப்ப படிவத்தை பயன்படுத்த வேண்டுமென்பது கட்டாயமில்லை. தகவல் கோரிக்கைக்கான காரணங்களை உள்ளடக்கிய எழுத்துமூலமான கோரிக்கையை சமர்ப்பித்தால் போதுமானது.

  1. பகிரங்க அதிகாரசபைக்கான தகவல் கோரிக்கையை சட்டத்தின் பிரகாரம் மின்னஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க முடியுமா?

ஆம்- சட்டத்தின் பிரிவு 24(6) மற்றும் ஒழுங்குவிதி 04 சரத்து 04 இன் படி (2017 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட அரசவர்த்தமானி படி) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  1. தகவல் கோரிக்கையை முன்வைக்கும் போது அதற்கான காரணங்கள் வழங்கப்பட வேண்டுமா?

இல்லை. சட்டத்தின் படி அதற்கான தேவைப்பாடு இல்லை அத்துடன் கோரிக்கைக்கான காரணங்களை குறிப்பிடுமாறு யாரும் எவரையும் வற்புறுத்த முடியாது.

  1. அவசர கோரிக்கைகள் என்றால் என்ன?

குடிமகனொருவரின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பான  கோரிக்கைகளை குறிக்கும். அப்படியான கோரிக்கைகள் தொடர்பில் 48 மணி நேரத்திற்குள் பதிலளிக்கப்பட வேண்டும்.

  1. தகவலறியும் உரிமைக்கான கோரிக்கையை முன்வைக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எவை?

பகிரங்க அதிகாரசபையின் தகவல் உத்தியோகத்தரிடம் தகவல் கோரிக்கையை முன்வைக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தகவலறியும் உரிமை விண்ணப்ப படிவம் 01 இல் குறிப்பிடப்பட்டுள்ளது (மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு).

  1. தகவல் கோரிக்கை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள எவ்வளவு நாள் எடுக்கலாம்?
  • தகவல் உத்தியோகத்தர் இயன்றளவு துரிதமாக கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • கோரப்பட்ட தகவலை உடனடியாக வழங்க முடியுமாயின் அவை உடன் வழங்கப்பட வேண்டும்.
  • பகிரங்க அதிகாரசபை குறித்த தகவலை வழங்குவதற்கு சம்மதிக்குமாயின் 14 நாட்களுக்குள் கோரிக்கையாளருக்கு அறிவித்து அதற்குரிய கட்டணம் ஏதுமிருப்பின் அதனை செலுத்துமாறு தகவல் உத்தியோகத்தர் அறிவிக்க வேண்டும்.
  1. தகவல் கோரிக்கை தொடர்பில் பதிலளிக்க எவ்வளவு காலம் எடுக்கலாம்?

தகவல் உத்தியோகத்தரால் கோரப்பட்ட தகவல் வழங்கப்படுமென கோரிக்கையாளருக்கு அறிவித்து உரிய கட்டணம் செலுத்தப்பட்டு 14 நாட்களுக்குள் கோரப்பட்ட தகவல் வழங்கப்பட வேண்டும்.

  1. எப்போது தகவல் கோரிக்கைக்கான பதிலளிக்கும் காலத்தை நீடிக்க முடியும்?

குறித்த தகவல் கோரிக்கை அதிக எண்ணிக்கையான பதிவுகள் அல்லது குறித்த பதிவுகள் பகிரங்க அதிகார சபையில் இருந்து தொலைவில் அமைந்துள்ள நகரில் அல்லது இடங்களில் இருக்கும் போது காலத்தை நீடிக்க முடியும். எனினும் குறித்த கால நீடிப்பு தொடர்பில் கோரிக்கையாளர் திருப்தியடையாவிட்டால் அவர் அது தொடர்பில் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீட்டை மேற்கொள்ள முடியும்.

  1. மூன்றாம் தரப்பு தகவல் என்றால் என்ன?

மூன்றாம் தரப்பு தகவல் என்றால் பகிரங்க அதிகார சபை அல்லது தகவல் கோரிக்கையாளர் தவிர்ந்த மூன்றாம் தரப்பினால் பகிரங்க அதிகாரசபைக்கு இரகசியமாக நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும் தகவல் ஆகும்.

விலக்களிப்பு மற்றும்; பொதுமக்கள் நலன் மேலோங்குதல்

  1. தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் விலக்களிப்பு பெறக்கூடிய தகவல் எவை?

சட்டத்தின் பிரிவு 5 இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மட்டுமே கோரிக்கை விடுக்க முடியாது

பொதுமக்கள் நலன் சாராத தனிப்பட்ட தகவல்களை கொண்ட விடயங்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் நாடுகளுடனான தேசிய தொடர்புகள், நாட்டின் பொருளாதாரம் சார்ந்த விடயங்கள், வர்த்தக தொடர்புகள் சார்ந்த இரகசிய விடயங்கள், தனிப்பட்ட மருத்துவ தரவுகள், தேசிய பாதுகாப்பு மற்றும் குற்றவியல் சார்ந்த வழக்குகளை பாதிக்க கூடிய தகவல்கள், நீதிமன்றங்களை அவமதிக்க கூடிய மற்றும் அவற்றின் சுயாதீன தன்மையை பாதிக்க கூடிய தகவல்கள், பாராளுமன்ற மற்றும் மாகாண சபைகளின் சிறப்புரிமைகளை பாதிக்க கூடிய தகவல்கள், பரீட்சைகளின் ஒழுங்கமைப்பை பாதிக்க கூடிய தகவல்கள், தேர்தல்கள் தொடர்பான இரகசிய தகவல்கள் மற்றும் அவை சார்ந்த தீர்மானங்கள் எடுக்கப்படாத அமைச்சரவை பத்திரங்கள் போன்ற தகவல்கள் தொடர்பில் கோரிக்கை விடுக்க முடியாது. 

  1. 'பொதுமக்கள் நலன் மேலோங்குதல்' என்றால் என்ன?

சட்டத்தின் பிரிவு 5(4) இன் படி மறுக்கப்படும் தகவலை வெளிப்படுத்துவதால் பொதுமக்கள் நலன் மேலோங்கி காணப்படுமாயின் தகவல்களை வழங்க வேண்டும். சட்டத்தின் பிரிவு 5இல் விலக்களிக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் இது பொருந்தும். 'பொதுமக்கள் நலன்' எனும் பதம் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவால் வரும் காலங்களில் வரைவிலக்கணப்படுத்தப்படும்.  

மேன்முறையீட்டு நடைமுறை

  1. மேன்முறையீட்டு நடைமுறை என்றால் என்ன?
  • தகவல் உத்தியோகத்தரால் வழங்கப்படும் பதில் தொடர்பில் கோரிக்கையாளர் திருப்தியடையாவிட்டால் அப்பதில் கிடைத்த நாளில் இருந்து 14 நாட்களுக்குள் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீட்டை மேற்கொள்ளலாம்.
  • குறித்தளிக்கப்பட்ட அதிகாரியில் பதிலில் திருப்தியடையாவிட்டாலோ அல்லது அவர் பதிலளிக்க தவறும் பட்சத்திலோ தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் இரு மாத காலப்பகுதிக்குள் மேன்முறையீட்டை மேற்கொள்ளலாம்.
  1. எவற்றை அடிப்படையாக கொண்டு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேன்முறையீட்டை மேற்கொள்ளலாம்?
  • குறித்தளிக்கப்பட்ட அதிகாரியின் தீர்மானம் தொடர்பில் திருப்தியடையாத போது
  • குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடமிருந்து பதில் கிடைக்கப்பெறாத போது
  1. தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மின்னஞ்சல் மூலமாக மேன்முறையீட்டை மேற்கொள்ள முடியுமா?

இல்லை- 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கட்டணங்கள் மற்றும் மேன்முறையீட்டு நடைமுறை தொடர்பிலான ஒழுங்குவிதி 13(2) இன் படி தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேன்முறையீட்டை நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ மட்டுமே மேற்கொள்ளலாம். 

  1. மேன்முறையீட்டாளரையோ அல்லது பகிரங்க அதிகாரசபையையோ ஆணைக்குழுவின் முன்னால் சட்டத்தரணியொருவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா?

ஆம், இதற்கு முன்னனுமதி அவசியமில்லை. ஆயினும் சட்ட ரீதியான பிரதிநிதித்துவம் கட்டாயமன்று.

  1. எப்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன?

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவால் சட்டத்தின் நோக்கங்களை அடையும் நோக்கில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

  1. தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு மேலும் மேன்முறையீட்டை மேற்கொள்ள முடியுமா?

ஆம், எந்த தரப்பினராவது தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தீர்மானம் தொடர்பில் திருப்தியடையாவிட்டால் ஆணைக்குழுவின் தீர்மானம் அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலப்பகுதிக்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டை மேற்கொள்ள முடியும்.

முனைப்புடனான வெளிப்படுத்துகை

  1. முனைப்புடனான வெளிப்படுத்துகை என்றால் என்ன?

முனைப்புடனான வெளிப்படுத்துகை என்றால் கோரிக்கை விடுக்கப்படும் முன்னரே தகவல்களை வெளியிடுவதாகும்.

  1. இலங்கை சட்டம் எவ்வாறு முனைப்புடனான வெளிப்படுத்துகையை ஊக்குவிக்கின்றது?

2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரச வர்த்தமானியில் வெளிப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதி 20 மற்றும் சட்டத்தின் 8, 9 மற்றும் 10 ஆகிய பிரிவுகள் இதனை ஊக்கப்படுத்துகின்றன.

  1. முனைப்புடனான வெளிப்படுத்துகை தொடர்பில் பகிரங்க அதிகாரசபைகளின் பணிகள் எவை?

நிறுவன கட்டமைப்பு மற்றும் கையாளப்படும் செயற்த்திட்டங்கள் உள்ளிட்ட தகவல்கள் ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட வழிகாட்டல் மற்றும் விண்ணப்ப படிவங்களின் படி வெளிப்படுத்தப்படல் வேண்டும். சட்டத்தின் பிரிவு 8 மற்றும் 9இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பகிரங்க அதிகாரசபைகள் ஏதாயினும் அமைச்சுக்கள் அல்லது மாகாண அமைச்சுக்களின் கீழே காணப்படுமாயின் அவற்றிற்கு அமைச்சர்களும் கட்டுப்படுதல் வேண்டும்.  அனைத்து பகிரங்க அதிகாரசபைகளும் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு அதனால் தகவலறியும் உரிமை நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் வருடாந்தம் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக பகிரங்க அதிகாரசபைகள் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி-20 இன் படி குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை அடிக்கடி வெளியிட வேண்டும்.

குற்றங்கள்

  1. தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எப்போது ஆணைக்குழு ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு பரிந்துரை செய்யலாம்?

சட்டத்தின் பிரகாரம் பகிரங்க அதிகாரசபையின் அலுவலகர் ஒருவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு உள்ளது.

குறித்த தகவல் உத்தியோகத்தர் வேண்டுமென்றே

  • தகவல் கோரிக்கையை ஏற்க மறுக்கும் போது
  • கோரிக்கையை ஏற்க மறுத்தமைக்கான காரணங்களை குறிப்பிட மறுக்கும் போது
  • மேலதிக கட்டணங்களை அறவிட்டால்
  • கோரிக்கையை செயற்படுத்த தவறும் போது

குறித்தளிக்கப்பட்ட அதிகாரி வேண்டுமென்றே

  • சட்டத்தின் பிரிவு 5 தவிர்ந்த ஏனைய பிரிவுகளின் கீழ் தகவல் கோரிக்கைக்கான மேன்முறையீட்டை நிராகரிக்கும் போது
  • உரிய காரணங்களின்றி மேன்முறையீட்டிற்குரிய பதிலை 3 கிழமைக்குள் வழங்க தவறும் போது
  1. எவை குற்றங்களாக கருதப்படும்?

சட்டத்தின் கீழ் கீழ்வரும் குற்றங்களை புரிந்த எந்தவொரு நபருக்கெதிராகவும் ஆணைக்குழுவால் நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும்

  • பிழையான, பூரணமற்ற அல்லது செம்மையற்ற தகவலை வழங்கும் போது
  • தகவல்களை அழித்தல், செல்லுபடியற்றதாக்கல், மாற்றங்களை மேற்கொள்ளல் அல்லது மறைத்து வைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
  • தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராக தவறும் போது
  • தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராகிய போதும் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமை, தகவல்களை வழங்காமை மற்றும் தவறான தகவல்களை வழங்குதல்
  • ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு கட்டுப்படாமை
  • ஆணைக்குழுவின் வேலைகளுக்கு தடையை ஏற்படுத்தல்
  1. குறித்த குற்றங்களுக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்படலாம்?

ஆணைக்குழு நீதிவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டால் ரூபா. 50,000 இற்கு அதிகமாகாத தண்டப்பணம் விதிக்கப்படலாம் அல்லது இரு ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது தண்டப்பணமும் மற்றும் சிறைத்தண்டனையும் சேர்த்து விதிக்கப்படலாம். உரிய ஒழுக்காற்று அதிகாரசபையினால் குறித்த தரப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம்.

ஏனைய கேள்விகள்

  1. தகவல்கள் எத்தகைய வடிவங்களில் வழங்கப்படலாம்?

மேற்பார்வை செய்தல், குறிப்புக்கள் எடுத்தல், அச்சுப்பிரதிகள், அத்தாட்சி பிரதிகள், இறுவெட்டுக்கள், ஒலி மற்றும் ஒளி நாடாக்கள், USB pendrive மற்றும் ஏதேனும் இலத்திரனியல் வடிவத்தில் கோரப்பட்ட தகவல்களை வழங்கலாம்.

  1. தகவல் கோரிக்கைகளுக்கு எவ்வாறு கட்டண அறவீடுகளை மேற்கொள்ள முடியும்?

தகவல் கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தகவல் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் வழங்கும் பட்சத்திலேயே கட்டணம் செலுத்த வேண்டும். அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் 2017 பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியின் கட்டணங்கள் மற்றும் மேன்முறையீட்டு நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக:

  • முதல் 4 பக்கங்களின் போட்டோ பிரதிகள் அல்லது அச்சு பிரதிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
  • வெற்றிகரமான மேன்முறையீட்டின் நிமித்தம் வழங்கப்படும் தகவல்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
  • மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும் தகவல்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

What is RTI?

At the core of the right to information is the principle of citizens’ right to know government policies and decisions that impact their lives. This includes the right to know how public funds are allocated and spent.

The RTI Act is the instrument for institutionalizing open government where all information related to activities performed in the service of the public is made easily accessible to all citizens.

Information is provided proactively where all public information not specifically exempted by the law is routinely provided in an accessible manner without a request for information being made. Proactively disclosing such information demonstrates the government’s sincere commitment to transparency, signifies citizen empowerment, and contributes to a reduction of corruption.

Information is also provided reactively in response to requests from any person or designated third party. Information Officers exist for all public authorities. All requests submitted in writing (oral requests are accepted where writing is not possible) to Information Officers trigger a process of assistance in securing the requested information. The provision of public information is an essential part of a functioning democratic system

rtiDownload Complete Document




Recent Decisions in Appeal (2024)

Cases filed in the Magistrate Court under Section 39 of the Right to Information Act No. 12 of 2016

Release of Information in Public Interest Appeals/Substantive Documents (SELECTED)

Vacancies

No result...

Official Email Addresses of the RTI Commission to be used by Appellants & Public Authorities

Important Decisions in Appeal (2023)

மேன்முறையீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தீர்மானங்கள்

 

uafi rti

Global Information Commissioners Meet in Tirana, Albania, June 2024; RTI Commissioners Kishali Pinto-Jayawardena and Jagath Liyana Arachchi at the sessions.

"Notable Developments in the Progress of the Right to Information Regime in Sri Lanka2023- First Quarter of 2024"

 

uafi rti

Global Information Commissioners Meet in Manila, June 2023 - RTI Commissioner Kishali Pinto-Jayawardena speaks at plenary sessions

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரடி விசாரணைகள்