ஆணைக்குழுவின் கடமைகளும் தொழிற்பாடுகளும்
சட்டத்தின் கீழ் அரச அதிகாரிகள் அவர்களின் கடமைகளுடன் ஒத்துப்போவதை கண்காணிப்பதற்கான கடமையை ஆணைக்குழு கொண்டிருக்கிறது. அத்துடன் தகவலறியும் உரிமை தொடர்பில் அரச நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புக்களை சிபாரிசு செய்தல், தகவல்களை வெளியிடுவதற்கான கட்டணத்தை நியாயமான முறையில் தீர்மானித்தல் போன்ற வழிகாட்டுதலையும் ஆணைக்குழு வழங்குங்கின்றது. அத்துடன் தகவல்களை இலவசமாக வழங்க கூடிய சந்தர்ப்பங்களை இனம்காணல், கட்டணங்களை அறுதியிட்டுரைத்தல், அரச அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சி திட்டங்களுடன் இணைந்து செயற்படுதல், சட்டத்தின் கீழான உரிமைகள் மற்றும் தேவைப்பாடுகளை மக்களறியும் வகையில் தெரியப்படுத்தல் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான ஆவணங்களை பேணல் தொடர்பான வழிகாட்டுதலை வழங்குதல் ஆகியன ஆணைக்குழுவின் பிரதான கடமைகளாக உள்ளன (பிரிவு 14).
ஆணைக்குழுவின் அதிகாரங்கள்
சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவானது மேன்முறையீட்டு விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இதிலே உள்ளடங்குவனவாக ஆணை/ உறுதிமொழியின் கீழ் ஒரு நபரைப் பரிசோதிப்பதற்கான அதிகாரம் மற்றும் அவரிடமுள்ள தகவல்களை வழங்குமாறு வேண்டுதல் (விதிவிலக்கான தகவல்கள் இரகசியமாக பரிசோதிக்கப்படும்). ஆணைக்குழுவானது அரச அதிகாரிகளினால் வைத்திருக்கப்படும் எந்தத் தகவலையும் பரிசோதிப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இதில் சட்டத்தில் விதிவிலக்காக குறிப்பிடப்பட்டவைகளும் உள்ளடங்குகின்றன. அரச அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களிடமுள்ள தகவல்களை வெளியிடவேண்டிய மாதிரிகளை (சட்டத்தினால் விதிவிலக்களிக்கப்பட்டவை தவிர்ந்த) வழங்க ஆணைக்குழு ஆணையிட முடியும். தகவல்களை வழங்குவதில் தாமதம் ஏற்படும்பொழுது பிரசைகளிடமிருந்து பெறப்பட்ட கட்டணத்தை மீள செலுத்தும் படியும் அரசஅதிகாரிகளுக்குஆணையிடும் அதிகாரத்தை ஆணைக்குழு கொண்டுள்ளது (பிரிவு 15).