செப்டெம்பர் 2017- மனித உரிமைகள் நிலையம் செப்டெம்பர் 6ஆம் திகதி இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தூதுக்குழுவினரை சந்தித்தது. மூன்று ஆணையாளர்கள்இ பணிப்பாளர் நாயகம் மற்றும் ஆணைக்குழுவின் சட்ட ஆய்வு அலுவலகர் ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தூதுக்குழுவினர் மனித உரிமைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் பிரான்ஸ் வில்ஜோயன் மற்றும் தகவலறியும் உரிமை பிரிவின் பிரதானி கலாநிதி லொலா ஷைலொன் ஆகியோரை சந்தித்தனர்.
ஏறத்தாழ 12 ஆண்டுகால கலந்துரையாடல்களுக்கு பின்னர் இலங்கை பாராளுமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் தகவலறியும் உரிமைக்கான சட்டத்தை நிறைவேற்றியதுடன் அது 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டமாக்கப்பட்டது. உலகில் உள்ள சிறந்த தகவலறியும் உரிமைக்கான சட்டங்களில் ஒன்றாக வர்ணிக்கப்பட்ட இச்சட்டம் 2017 பெப்ரவரி மாதம் நடைமுறைக்கு வந்தது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட இரு உறுப்பினர்களுடன் ஆணைக்குழுவிற்கான அனைத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டதையடுத்து சட்டத்தினால் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்ற ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது.
இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தூதுக்குழுவினரின் இவ்விஜயத்தின் நோக்கம் மனித உரிமைகள் நிலையத்தின் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் தகவலறியும் உரிமையை அமுல்ப்படுத்தும் முறை ஆகியன தொடர்பில் ஆராய்வதும் அவற்றை செயற்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் முறை தொடர்பிலும் ஆராய்வதாகும். மேலும் தகவலறியும் உரிமை சட்டமூலத்தை தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கு அமுல்படுத்தும் விதம் மற்றும் பதிவுகளை பாதுகாக்கும் முறைகள் ஆகியன தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இலங்கையின் முற்போக்கான தகவலறியும் உரிமை சட்டம் மற்றும் அதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் ஆபிரிக்காவின் மாதிரி தகவலறியும் உரிமைக்கான சட்டமூலத்துடன் ஒப்பிடப்பட்டது. மேலும் தற்போது மற்றும் எதிர்காலத்தில் இலங்கையின் தகவலறியும் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் தென்னாபிரிக்காவின் தகவலறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஆராயப்பட்டது. மேலும் தென்னாபிரிக்காவின் கருத்து சுதந்திரம் மற்றும் தகவலறியும் உரிமை தொடர்பிலான விசாரணை ஆணையாளர் பன்ஸி லக்குல்லா அவர்களையும் இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு உறுப்பினர்கள் சந்தித்து தென்னாபிரிக்காவின் தகவலறியும் உரிமை செயற்பாடுகள் தொடர்பிலான படிப்பினைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.
இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு உறுப்பினர்களின் இவ்விஜயம் இரு நிறுவனங்களுக்குமிடையிலான இணைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இது எதிர்காலத்திலும் இரு தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.